பாட்டி ---தலை முறையின் இடைவெளி
மாமா வீடுதான் அவளுக்குத் தஞ்சம்.
நடு வீட்டின் ஒரு ஓரம்
பாய் விரித்து அமர்ந்து இருப்பாள்
தாத்தா சென்றபின் எங்கும் செல்வதில்லை
பேர குழந்தைகளைத் தவிர.
கண் சரியாகத் தெரியாத போதும்
வகையாகச் சரியாகச் சேர்த்து மடித்து
வெத்தலை இடிப்பதில் ஒரு ராகம் இருக்கும்
டக்.டக்.டக்.என்று.
எப்பொழுதாவது அம்மாவுடன்
மாமா விடு செல்வேன்.
யாரு........ஆங் .......வா....
அம்மாவை அருகில் இருத்திகொள்வாள்.
மெதுவாக என்னென்னவோ சொல்வாள் அம்மாவிடம்
அது அதிகமாக அத்தையை பற்றிதான் இருக்கும்.
சிதம்பர ரகசியம் முடிந்ததும்
எங்கடா......நீ......இருக்க
என்ன .........
இந்தா .......இடித்து வைத்திருக்கும்
வெத்தலையை தருவாள்.
அப்படியொரு சுவை இருக்கும் அதில்
சொல்லிமாளது. பின் ------
அருகில் இருத்தி தலையைத் தான் முதலில் தொடுவாள்
என்னடா...இது ....கூத்தாட்டி...மாதிரி
இவ்வளவு முடி......வெட்டு முதல்ல
பின் கால் பக்கம் கையை வைத்து
எப்ப…பாரு ......சாக்கு மாதிரி துணில
ஒரு டவுசர்..........
உங்க .......அப்பன .........சொல்லணும் ...ம்ம்
நல்லா படிக்கிறியா.......ஆங்.........
நல்ல பாசம் மிகுந்து கிடக்கும்
ஆனால்......வைராக்கியமும் ......கோவமும்
அளவுக்கு மிஞ்சியது.
அடம்பிடிப்பதில் சின்னக் குழந்தையும் கூடத் தோற்கும்.
எப்பொழுதாவது மாமாவிடம் வாங்கி
கட்டி கொள்வாள்
பொறுமை தாங்காமல்
கிழவி......செத்து தொலைய வேண்டியது தானே
மாமா சொல்லிவிட்டு சென்று விடுவார்.
அருகில் நான் இருந்தால்
கட்டி பிடித்துக் கொண்டு
நீண்ட மௌனம் காப்பாள்
அழமாட்டாள்.....ஆனால் கண்ணில்
நீர் கோர்த்து இருக்கும்..........
ஒரு இறுக்கம் அவள் என்னைப் பிடித்த
பிடியிலும் இருக்கும்
அவள் மௌனத்திலும் இருக்கும்
பாட்டி.......
ஒரு தலை முறையின் இடைவெளி
...கனவுப் பிரியன்...
யாரையும் அருகில் நெருங்க விடமாட்டாள்